கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, முளகுமூடு, நெய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் மாலத்தீவில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுவந்தனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாலத்தீவிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கட்டுமான தொழிலாளர்கள் கடந்த 50 நாள்களாக வேலை இழந்து அறையிலேயே தங்கியுள்ளனர். இவர்கள் வருமானமின்றி ஒரு வேளை உணவுக்குக்கூட திண்டாடிவருகின்றனர்.
மூன்று கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மாலி நகரத்தில் கரோனா வேகமாகப் பரவிவருவதாகவும் தமிழ்நாடு அரசு தங்களைத் தமிழ்நாட்டுக்கு மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் காணொலி ஒன்றை பதிவுசெய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்தக் காணொலியில், "கட்டுமான தொழிலாளர்கள் தங்கியிருக்கும் அறையில் இருக்கும் சக தொழிலாளிகள் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அறையிலும் 20 முதல் 30 பேர் தங்கியுள்ளனர். ஆகையால் தங்களுக்கும் நோய்த்தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இங்கு முறையான மருத்துவச் சிகிச்சை வசதிகள் இல்லாததால் தங்களைத் தாயகம் அழைத்துச் செல்ல அரசு முன்வர வேண்டும்.
தற்போது இந்தியர்களைத் தாயகம் அழைத்துச் செல்ல இந்தியாவிலிருந்து வந்த இரண்டு கப்பல்களிலும் தமிழர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.
எனவே தமிழ்நாடு அரசு மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் குமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர்களைக் கப்பல் மூலம் தூத்துக்குடி அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க... 187 தமிழர்களுடன் இந்தியா வந்தடைந்தது சிறப்புக் கப்பல்!