கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேசிய வாள் சண்டை வீரர் டேவிட் ராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு, திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
"தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது என பத்திரிகையாளர் சந்திப்பில் ஆதாரங்களை அம்பலப்படுத்திய சமூக செயற்பாட்டாளர் முகிலன் அன்றிரவே காணாமல் போனார். தற்போதுவரை அவர் என்ன ஆனார் என தெரியவில்லை. ஒரு சமூக செயற்பாட்டாளர் திடீரென காணாமல் போனது மக்களிடையே பெரும் கேள்வியை எழுப்புகிறது. 120 நாட்கள் கடந்து விட்டது அவர் உயிரோடு இருக்கிறாரா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. முகிலனை உடனே கண்டுபிடித்து தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார். தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.