கன்னியாகுமரியிலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, தேவர கட்டு சரஸ்வதி தேவி, குமாரகோவில் முருகன் ஆகிய சுவாமி சிலைகள் மன்னர் காலம் முதல் கேரள அரசால் கோட்டைக்கு நவராத்திரி விழாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்தச் சுவாமி சிலைகள் பத்மநாபபுரத்திலிருந்து போலீஸ் அணிவகுப்புடன், மன்னரின் உடைவாள் ஏந்தி யானை மீதும் பல்லக்கின் மீதும் ஊர்வலமாகச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்றைக் காரணம்காட்டி ஊர்வலம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.
பாரம்பரிய சிறப்புமிக்க இந்த ஊர்வலத்தை வழக்கம்போல் நடத்த வேண்டும் என்று பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைவைக்கப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
இந்நிலையில் பொதுமக்கள், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நவராத்திரி தெய்வச் சிலைகள் ஊர்வலம் பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் நடைபெறுவதுபோல் நடைபெறும் என தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, "கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுவாமி சிலைகள் ஆண்டுதோறும் கேரள மாநிலம் பத்மநாபபுரம் சுவாமி கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காகப் பாரம்பரியமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இந்த ஊர்வலம் நடக்குமா என்ற கேள்வி இருந்தது. அதேநேரம் இந்த ஊர்வலத்தை பாரம்பரிய முறைப்படி நடத்த அனைத்து தரப்பினரும் கோரிக்கைவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கேரள அரசிடம் இது தொடர்பாகப் பேசி ஊர்வலம் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ஊர்வலம் இந்த ஆண்டும் நடைபெறும்.
கேரளாவுக்குச் சுவாமி சிலைகள் கொண்டுசெல்வதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, உரிய இடைவெளிவிட்டு, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து பங்கேற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.