கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியின் கரையோரமாக நேற்றிரவு முதல் அனுமதியின்றி ஒரு கப்பல் நின்றுகொண்டிருக்கிறது. இதனால் இன்று அதிகாலை கட்டுமரம், வள்ளங்களில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் குளச்சல் கடலோரக் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து கடலோரக் காவலர்கள் குளச்சல் கடல் பகுதி சர்வதேச நீர்வழித் தடத்தின் அருகே இருப்பதால் வெளிநாட்டு கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக கரையோரமாக வந்ததா? இல்லை ஆய்வு கப்பலா? என விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அந்தக் கப்பல் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமான பணிக்காக கட்டுமான நிறுவனத்தினரால் கோவாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரத்துடன் கூடிய இழுவை கப்பல் என்பது தெரியவந்தது.
இது குறித்து கடலோரக் காவல் படையினர் கூறுகையில், உடன்குடி கடல் பகுதிக்குள் இந்தக் கப்பல் நுழைவதற்கு நாளைதான் அனுமதி உள்ளது. எனவே இன்று குளைச்சல் கடற்பகுதியில் கப்பலை நிறுத்தியுள்ளனர். அனுமதி இன்றி உள்ளே வந்ததால் வேறு பகுதிக்கு கொண்டுசெல்லுமாறு அறிவுறுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அதீத மது... விபரீத ஆசை...! - தத்தளிக்கும் கப்பல் கேப்டன்