கன்னியாகுமரி: நாகர்கோவிலில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயின்று வரும் பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் சோறு, பருப்பு, குழம்பு மற்றும் முட்டை பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகளைச்சேர்ந்த மாணவிகள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் சுகாதாரத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 26 மாணவிகளும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதமுள்ள மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். சோர்வடைந்து காணப்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பள்ளியில் மாணவிகள், அவர்களது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் உள்ள மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாநகராட்சி மேயர் மகேஷ் , அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளட்டோர் நேரில் பார்த்து விசாரித்தனர்.