சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புகழ்மிக்க பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்வது வழக்கம்.
இக்கோயிலில் வழிபாடு கட்டணங்களாக அபிஷேகத்திற்கு ரூபாய் 250, சந்தனகாப்பு ரூபாய் 100, கன்னியாபோஜனம் ரூபாய் 150, புடவை சார்த்த ரூபாய் 10, அரவணை ரூபாய் 75, என வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற 20ஆம் தேதி முதல் வழிபாடு கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கோயில் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
அதன்படி புதிய கட்டணமாக அபிஷேகத்திற்கு ரூபாய் 500, பட்டாபிஷேகம் ரூபாய் 1500, சந்தனகாப்பு ரூபாய் 200, கன்னியா போஜனம் ரூபாய் 500, புடவை சார்ந்த ரூபாய் 50, அரவணை ரூபாய் 200 என வழிபாட்டுக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் உள்ளது.
இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிபாடுகள் இலவசமாக செய்யும் வகையில் இருக்க வேண்டும். இதை விடுத்து வழிபாட்டு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இந்தக் கட்டண உயர்வை கோயில் நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும் இல்லையேல் நாங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பக்தர்களையும் ஒன்று திரட்டி கோயிலுக்குள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
கோயிலுக்குள் மனநிம்மதியை தேடிச் செல்லும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய ஆகும் செலவை நினைத்தே புதிய மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.