கன்னியாகுமரி: மாவட்ட காவல் துறையினருக்கு கழுகு கண்கள் என்ற பெயர்கொண்ட போக்குவரத்து ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அறிமுக நிகழ்வு, நேற்று (பிப். 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வாகனத்தை அறிமுகம் செய்துவைத்து, அதன் பயன்பாட்டைத் தொடங்கிவைத்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர், “கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘கழுகு கண்’ என்ற பெயரில் கண்காணிப்பு வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். தனியார் நிறுவனத்துடன் இணைந்து இதைச் செயல்படுத்தியுள்ளோம்.
இந்த வாகனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வாகனத்தைச் சுற்றிலும் கண்காணிப்பு படக்கருவி பொருத்தப்பட்டிருக்கும். கண்காணிப்புப் பணிகள் தேவைப்படும் இடத்தில், இந்த வாகனத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
போக்குவரத்து விபத்து, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் செல்வது உள்ளிட்ட வழக்குகள் கடந்த ஆண்டைவிட 124 விழுக்காடு அதிகமாகப் பதிவாகியுள்ளன.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 1,400 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. அதுவே இந்தாண்டில் 2,500-க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன” என்று கூறினார்.