கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடும் வெப்பத்தின் காரணமாக மக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் நிலவிவந்த வெப்பம் தணிந்து குளிர் நிலவி வருகிறது.
அதேபோல, மாவட்டத்தில் மலைப்பகுதிகள், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி பகுதியில் 30.4 மி.மீ மழையும், சுருளகோடு, கொட்டாரம் பகுதியில் 26.8 மி.மீ மழையும், கன்னிமார் 21.2 மி.மீ, பூதப்பாண்டியில் 14.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளன.