நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை நாகர்கோவிலில் செயல்பட்டு வருகிறது. இங்கு காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் என பலரது குடியிருப்புகளும், விளையாட்டு மைதானம் போன்றவையும் காணப்படுகிறது. இந்நிலையில் இங்கு பணியாற்றி வரும் தலைமை காவலர் சொர்ணவேணி (39), தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு கேட்டுள்ளார். அதற்கு விடுப்பு வழங்காமல் தரக்குறைவாக பேசியதோடு உயர் அதிகாரி தன்னை தாக்கியதாக பெண் காவலர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து நேசமணிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடந்த சம்பவம் குறித்து சொர்ணவேணி கூறும் போது, "பயிற்சி எஸ்.ஐ-களுக்கு நான் கார்டாக இருந்தேன் எனது கமெண்ட்டை அவர்கள் பின்பற்றுவதில்லை. அதனால் சில நேரங்களில் என்னிடம் அவர்கள் கூறுவது எப்படியானாலும் நாங்கள் தான் உங்களுக்கு அதிகாரியாக வருவோம் அப்போ உங்களை பார்த்துக்கொள்ளலாம் என கூறிக் மிரட்டி வந்தனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பல முறை என்னை அலைக்கழித்து வந்த அவர்கள், நேற்று எனது குழந்தைக்கு அதிகமாக காய்ச்சல் இருந்தது. நான் காலையில் பணிக்கு வரும் போது தற்செயல் விடுப்பு கேட்டு கடிதம் கொடுத்தேன் அதனை வாங்கிக்கொண்ட எஸ்.ஐ வள்ளிச்செல்வி (27), என்னிடம் நீங்கள் சிறையிலிருந்து போக்சோ கைதிகளை நீதிமன்றம் அழைத்து செல்லுங்கள் அதன்பின் வாருங்கள் என கூறினார். நானும் பணிக்கு சென்றேன். மீண்டும் மாலையில் சென்ற போது இரவு ஆஜர் அணி வகுப்பில் சேர்ந்து கொள்ளுங்கள் அதன்பின் தற்செயல் விடுப்பிற்கு பரிந்துரை செய்யலாம்” என்று கூறியதாக தெரிவித்தார்.
மேலும் "அதன்பின் ஆஜர் அணிவகுப்பில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் வள்ளிச்செல்வியை சந்தித்த போது, நீ சரியாக அட்டென்சன் ஆகவில்லை. ஒழுங்காக சல்யூட் அடிக்கவில்லை. அதனால் ஒழுங்காக சல்யூட் அடித்தால் தான் உனக்கு விடுப்பு வாங்கி கொடுக்க முடியும் என கூறியதோடு சாதி ரீதியாகவும் பேசி உணர்ச்சி வசப்படுத்தினார். இதனால் எனது கையில் இருந்த பேப்பரை நான் கசக்கி கீழே எறிந்தேன் உடனே எனது கன்னித்தில் எஸ்.ஐ அடித்ததோடு என்னை பிடித்து தள்ளிவிட்டார்.
இதனால் உள்காயம் ஏற்பட்டதாகவும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
பெற வேண்டி எனது குழந்தையுடன் வந்த போது என்னையையும், எனது குழந்தையையும் அட்மிஷன் செய்யக் கூடாது என அதிகரிகளை கொண்டு மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. குழந்தை மருத்துவர் ஒருவர் எனது குழந்தைக்கு அதிக காய்ச்சல் இருப்பதை பார்த்து உடனடியாக எனது குழந்தைக்கு மட்டும் சிகிச்சை அளித்தனர்" என்று கூறினார்.
டாணாக்காரன் திரைப்படத்தில் உயர் அதிகாரிகள் தனக்கு கீழ் உள்ள காவலர்களை எப்படியெல்லாம் உணர்ச்சி பூர்வமாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர் என்பதை காட்சிப்படுத்தினர். அதேப்போன்று கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் நடந்திருப்பது அனைவருக்கும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காவலர் குடியிருப்பில் திருட்டு - எஸ்.ஐ. மகன் திருடியது அம்பலம்!