கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (50). இவர், 2013ஆம் ஆண்டு அகஸ்தீஸ்வரம் பகுதியில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஞானமணி என்பவர் தனது மகனுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக ராஜேஷை அணுகியுள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு 500 ரூபாய் கையூட்டுத் தருமாறு ஞானமணியிடம் ராஜேஷ் கேட்டுள்ளார். இது குறித்து ஞானமணி லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ராஜேஷ் ஞானமணியிடம் கையூட்டு பெறும்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும்களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
கையூட்டு பெற்றதற்காக ராஜேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு 2015ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி, மாவட்ட குற்றவியல் நீதிபதி அருணாச்சலம் 500 ரூபாய் கையூட்டு வாங்கிய ராஜேஷுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை கட்டத் தவறும் பட்சத்தில் கூடுதலாக இரண்டு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தீர்ப்பில் கூறினார்.
இதையும் படிங்க: தினமும் திருடலனா எனக்கு தூக்கம் வராது சார் - போலீஸை அதிரவைத்த கொள்ளையனின் பதில்!