கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு- கேரள எல்லை களியக்காவிளை வழியாக கேரள மாநிலத்திற்கு கடந்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை பகுதியில் உதவி ஆய்வாளர் சிந்தாமணி தலைமையிலான காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது லாரியில் இருந்து இறங்கிய ஓட்டுநர் தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
காவல் துறையினர் வாகனத்தை சோதனை செய்ய முயற்சி செய்தபோது, எதிர்பாராத நேரத்தில் லாரி ஓட்டுநர் ஓட்டம் பிடித்தார். சுமார் இரண்டு கிலோமீட்டர் காவல் துறையினர் அவரைத் துரத்தியும் பிடிக்க முடியவில்லை. லாரியில் மேற்கொண்ட சோதனையில், உப்பு மூட்டைகளுக்கு அடியில் சுமார் 14 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
அதனைப் பறிமுதல் செய்த களியக்காவிளை காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரி, அரிசி ஆகியவை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: மேலே வாழைக்குலைகள், உள்ளே 4 டன் ரேஷன் அரிசி: லாரியை மடக்கிப் பிடித்த அலுவலர்கள்