குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள மீனவ கிராமமான இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் ஒரு பாழடைந்த கட்டடத்தில் கேரளாவிற்கு கடத்த ரேஷன் அரிசி, படகிற்கு மானிய விலையில் வழங்கக்கூடிய மண்ணெண்ணெய் உள்ளிட்டவை பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக காவல் துறைக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து நித்திரவிளை காவல் ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் மோகன் ஜாஸ்லின் தலைமையிலான காவலர்கள் இரவிபுத்தன்துறை பகுதியில் திடீர் சோதனை வேட்டை நடத்தினர். இதில் ஒரு பாழடைந்த கட்டடத்திற்குள் அரசின் முத்திரையுடன் கூடிய சாக்கு மூட்டைகள் இருந்தன.
அதை காவல் துறையினர் சோதனை செய்தபோது அரசு முத்திரையுடன்கூடிய ஒரு டன் ரேஷன் அரிசி, மத்திய அரசால் கரோனா காலத்தில் நியாயவிலைக் கடைகளில் வழங்கிவரும் கொண்டை கடலையும் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது.
மேலும், மீனவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்தும் படகுகளுக்குத் தமிழ்நாடு அரசால் மானிய விலையில் வழங்கக்கூடிய மண்ணெண்ணெய் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 39 கேன்களில் சுமார் 1400 லிட்டரும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல் துறையினர் கண்டெடுத்த ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றைப் பறிமுதல்செய்து காவல் நிலையம் கொண்டுவந்து புட்செல் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசால் வழங்கக்கூடிய அரசு முத்திரை இடப்பட்ட அரிசி மூட்டைகள் கடத்தல்காரர்களிடம் வந்தது எப்படி? இந்த அரிசி, மண்ணெண்ணெய்யை மறைத்துவைத்து கடத்த முயன்றது யார்? என்ற கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.