கன்னியாகுமரி: மணவாளக்குறுச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலைக்கு 1,144 ஹெக்டேர் கடல் பரப்பில் மணல் அள்ள அனுமதி அளித்த தமிழ்நாடு அரசை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று (ஆக. 21) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,"மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து கற்களை கேரளாவில் கட்டுகிற விழிஞம் துறைமுகத்திற்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால், அந்த துறைமுகத்திற்கு கேரளாவில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேங்காய் பட்டிணம் துறைமுகத்தை, அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக திறந்து வைத்தார், ஒரு நாளாவது கட்டுமான பணிகள் குறித்து நேரில் வந்து பார்த்தாரா?
மணவாளக்குறுச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலைக்கு 1,144 ஹெக்டேர் கடல் பரப்பில் மணலை அள்ள திமுக அரசு அனுமதி அளித்தது. இதனால், மீனவர்களுக்கு என்ன பாதுகாப்பு, அனைத்து மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதேபோன்று, தான் தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் 27 மீனவர்கள் இறந்துள்ளார்கள். துறைமுகத்தை பொறுப்புணர்வோடு கட்டாமல் தான்தோன்றி தனமாக மீனவர்களிடம் கருத்து கேட்காமல் கட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு வந்த மலேசியாவில் இருந்து வந்த ஆற்று மணலை தமிழ்நாடு ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை. கன்னியாகுமரியில் ஒன்று, இரண்டு என்று தற்போது 16க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் தனிநபர் முதலாளிகளுக்கு அரசு அதிகாரிகள் கொடுத்துள்ளனர். கேரளாவிற்கு மட்டும் 80 லட்சம் டன் கருங்கற்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால், கேரளா ஆற்றில் மணல் அள்ளவோ, மலைகளில் பாறைகள் உடைக்கவோ அம்மாநில அரசு அனுமதியளிக்கவில்லை.
நாங்கள் கும்பிடும் சாமியை விட இந்த பூமியை வணங்குகிறோம். பூமியை காக்கும் கடமை எல்லோருக்கும் உள்ளது. ஆனால் பூமி தாயின் மார்பை அறுக்கிறார்கள். இதனை இவர்கள் சரி செய்யவில்லை என்றால் நாங்கள் அதிகாரத்தில் வந்து இதனை சரி செய்வோம்.
திமுக அரசு, மத்திய அரசிடம் எதை தட்டி கேட்டுள்ளார்கள். நாங்கள் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள், ஆனால் இவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. 8 கோடி மக்களின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு செய்யவில்லை என்றால் அதனை தடுக்கும் தைரியம் திமுகவிற்கு உண்டா?" எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும்,"ஆற்று மணலை அள்ளித்தான் உங்கள் பாட்டன் வீடு கட்டினானா, தமிழ்நாட்டு தேவைக்கு மட்டும்தான் அள்ளி விற்கப்பட்டதா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும், நாடு முழுவதும் லாரி லாரியாக விற்றார்கள். அரசே பொறுப்புணர்வோடு விதிகளை பின்பற்றி மணல் அள்ளியிருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. இதற்கு தீர்வு மணல் கொள்ளைக்கு துணை நின்ற இவர்களை தூக்கி அந்த குழியில் போட்டு மூட வேண்டும்.
மலேசியாவில் ஆற்று மணலை தருகிறேன் என்றார்கள், இவர்கள் ஏன் அனுமதிக்கவில்லை. அதனை அனுமதித்தால் இங்கே கனிம வளங்கள் கொள்ளை அடிக்க முடியாது. தனிநபர் முதலாளிகளின் லாபத்திற்காக அதை தடுத்துவிட்டார்கள்" என சரமாரியாக திமுக அரசு மீது சீமான் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: தனிச்சையாக அரசு எடுத்த முடிவே 27 மீனவர்களின் உயிர்பலிக்கு காரணம்... சீமான்