கன்னியாகுமரி: ஆடி மாதத்தில் வரும் அமாவாசை இந்துக்களின் மிக முக்கியமான விரத நாளாக கருதப்படுகிறது. அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களை நினைத்து பலி கர்மம் செய்து தர்ப்பணம் கொடுத்து வருவதால், அவர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி, புரட்டாசி மற்றும் தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை ஆகும். இந்த ஆண்டு ஆடி மாதம் 2 அமாவாசை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் அமாவாசையும், இன்று (ஆகஸ்ட் 16) இரண்டாவது அமாவாசையும் ஆகும்.
இந்த நாளில் முன்னோர்களை வணங்கி கருப்பு எள், அரிசி, சாத உருண்டைகள், தர்பை, சந்தனம், குங்குமம், பூக்கள் உள்ளிட்ட பொருட்களால் முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து, பின்னர் அந்த சாதம் அடங்கிய இலையோடு தலையில் வைத்து சுமந்து தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால், இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும், குடும்பமும் அதன் சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே இருந்து வருகிறது.
இதையும் படிங்க: அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக நித்தியானந்தா ஆசிரமம் அகற்றம்.. வருவாய்த்துறை நடவடிக்கை!
அந்த வகையில், இன்று காலை முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பெரும் அளவில் பொதுமக்கள் வந்து கடலில் நீராடி பலிகர்மம் செய்து தர்ப்பணத்தில் ஈடுபட்டனர். பின்னர், பகவதி அம்மன் கோயிலில் முன்னோர்களின் பெயரைச் சொல்லி அர்ச்சனைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
அதே போன்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து திரளான மக்கள் பலிதர்ப்பணம் செய்து வருகின்றனர். மேலும், கடல் மற்றும் நீர்நிலைகளில் பொதுமக்கள் நீராடுவதை முன்னிட்டு காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆற்றின் கரையோரங்களில் அதிகளவில் தீயணைப்புத் துறை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: இடுகாட்டுக்கு சாலை வசதியில்லை! இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்!