கன்னியாகுமரி: கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் நாளை (செப்.6) கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடச்சேரி பகுதியில் உள்ள ‘குட்டி குருவாயூர்’ என்றழைக்கப்படும் கிருஷ்ணன் கோயிலில் இந்த ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து இன்று (செப்.5) நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கிருஷ்ணர் வேடமிட்டு முத்து குடை ஏந்தியபடியும், குதிரையில் கிருஷ்ணன் வேடம் அணிந்த மாணவரை அமர வைத்தும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். மாணவர்கள் ஆண்டுதோறும் கிருஷ்ணர் வேடமிட்டு, கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவது வழக்கம்.
இதனையடுத்து கோயிலில் பஜனை மற்றும் விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடந்தன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ண ஜெயந்தி என்பது, கிருஷ்ணர் தனது 8வது அவதாரமாகக் கிருஷ்ணர் அவதாரத்தில் அவதரித்து, இல்லங்களுக்கு வருகை தந்து மக்களை அருள்பாலிப்பதே இதன் அம்சம் ஆகும். மேலும், இந்த கிருஷ்ணர் அவதாரம், மகாவிஷ்ணுவின் மிக முக்கிய அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதில், மிக எளிமையாக மக்களோடு மக்களாக கிருஷ்ணர் வாழ்ந்து, தனது புல்லாங்குழல் இசையால் அனைத்து உயிர்களுக்கும் கருணை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மக்கள் தங்கள் வீடுகளில் பாதம் போன்ற அச்சுகளை அரிசி மாவால் பதித்து, கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக வழிபாடுகள் நடத்துகின்றனர். இதன் மூலம் கிருஷ்ணர் அடியெடுத்து வைத்து தங்கள் வீடுகளுக்கு வந்து அருள் வழங்குவார் என்பது ஐதீகம்.
மேலும், கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணர் சிலைகளுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்து, தயிர், வெண்ணெய், அவல், சீடை, முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு போன்ற உணவு வகைகளை படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்வர். கிருஷ்ண ஜெயந்தியன்று தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு கண்ணன், ராதை வேடமிட்டு மக்கள் கொண்டாடுவர்.
இதையும் படிங்க: Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சென்னையில் கிருஷ்ணன் பொம்மைகள் விற்பனை ஜோர்!