நாகர்கோவிலை அடுத்த பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் மாஹின் அபுபக்கர். பெயின்டிங் வேலை செய்துவரும் இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் 8ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் பாரிஸ் முகமது 6ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இருவரும் பள்ளிவிளைப் பகுதியில் சரண்யா என்பவர் வீட்டில் டியூசனுக்கு செல்வது வழக்கம். கடந்த செவ்வாய்க்கிழமை டியூசனுக்கு சென்ற பாரிஸ் முகமதுவை, தலையில் ரத்தம் வழிந்த நிலையில் அவனது அண்ணன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான்.
இதைக்கண்ட பெற்றோர் பதறியபடி விசாரித்துள்ளனர். ஒரு மாணவியின் நோட்டை எடுத்ததாகக்கூறி டியூசன் ஆசிரியையான சரண்யா இரும்பு வாளியால் தாக்கியதில் பாரிஸ் முகமதுவின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது பாரிஸ் முகமது 8 தையலுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து மாஹின் அபுபக்கர் கொடுத்த புகாரின்பேரில் சரண்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது தாய் தந்தையுடன் தலைமறைவாகியுள்ள டியூசன் ஆசிரியை சரண்யாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் பார்க்க: சாவியை தொலைத்ததால் மாணவியை தாக்கிய ஆசிரியர்!