குமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் தமிழக காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகள் பாஜக ஆட்சியில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என பிரதமர் பதில் அளிக்க வேண்டும். இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ன ஆனது? குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கு என்ன ஆனது? விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் என்ன ஆனது? ஊழலற்ற நிர்வாகம் என்ன ஆனது? இந்த கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறுபான்மையினர் மீது குறி வைக்கப்பட்டு அவர்கள் மீதான தாக்குதல் இரட்டிப்பானது. ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நினைத்து பொதுமக்கள் வெட்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு அரசு முற்றிலும் முடங்கிவிட்டது. அரசு என்பது மக்களுக்காகத்தான். ஆனால் தமிழ்நாட்டில் அப்படியா நடக்கிறது! முதலமைச்சர் மீது வழக்கு, துணை முதலமைச்சர் மீது வழக்கு, அமைச்சர்கள் மீது குட்கா விற்பனை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
அதிமுகவுக்கு, பாஜகவிற்கு கொள்கை கிடையாது. அனைத்து அமைச்சர்களும் தங்களால் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமோ அந்த அளவு பணம் சம்பாதித்து ஊழல் செய்கின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பாஜகவிடம் சரணடைந்து விட்டனர். இவர்கள் அரசின் ரிமோட்டாக டெல்லி இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்