கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்., வேட்பாளர் வசந்தகுமாருக்கு ஆதரவாக அய்யா வழி சமய மக்கள் வாக்களிக்க வேண்டும் எனச் சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ‘இந்திய நாட்டிற்கு மோடியை விடச் சிறப்பான ஆட்சியை ராகுல் காந்தியால் மட்டுமே தர முடியும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்., வேட்பாளர் வசந்தகுமார் ஏழ்மையை உணர்ந்தவர். பல்வேறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார்.
லாப நோக்கத்துக்காக மட்டுமே குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகத்தை அமைக்க மத்திய அரசின் ஆதரவோடு பொன்.ராதாகிருஷ்ணன் முன்னெடுத்து வருகிறார். துறைமுகம் வந்தால் பல்லாண்டுப் பாரம்பரியமிக்க குமரி முற்றிலும் அழிந்துவிடும்.
இது ஒரு ஏமாற்று வித்தை. நடைபெற உள்ள தேர்தலில் பாஜகவுக்கு எதிராகவே கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வாக்களிப்பார்கள். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் எனக் கூறியவர் தூத்துக்குடித் தொகுதியில் அய்யா வழி மக்கள் கனிமொழிக்கு ஆதரவாகவும் திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானத்திற்கு ஆதரவாகவும் வாக்களிப்பார்கள்’ எனத் தெரிவித்தார்.