கன்னியாகுமரி மாவட்டம், அரசு ரப்பர் தோட்ட கழகத்தில் கீரிப்பாறை, காளிகேசம், மணலோடை உள்பட ஒன்பது பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ரப்பர் பால் வெட்டும் பணியில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கீரிப்பாறை பிரிவில் வேலை பார்த்து வரும் 200க்கும் மேற்பட்ட ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களுக்கு அரசு ரப்பர் கழக நிர்வாகம் கடந்த பல மாதங்களாக ஊதியம் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது.
இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டதற்கு முறையான பதில் இல்லாததால், கீரிப்பாறை பிரிவை சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் அரசு ரப்பர் கழகத்தை கண்டித்து பல முறை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் ஊதியம் பிடித்தம், பணி கொடுக்க மறுப்பு உள்பட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் அரசு ரப்பர் தோட்ட கழக நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
எனவே, தொழிலாளர்கள் நலனுக்கு எதிராக செயல்படும் அரசு ரப்பர் தோட்ட கழக நிர்வாகத்தைக் கண்டித்து கீரிப்பாறை பிரிவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் இன்று (ஆகஸ்ட் 12) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கீரிப்பாறை பிரிவில் ரப்பர் பால் வெட்டும் தொழில் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.