கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு, கீரிப்பாறை, சிற்றார், மணலோடை உள்ளிட்ட நான்கு அரசு ரப்பர் கோட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால் வடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆண்டு தோறும் பண்டிகைகால முன்பணம் வழங்குவது வழக்கம். இந்நிலையில், சிற்றார் கோட்டத்தில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கான முன்பணம் வழங்ககேட்டு ரப்பர் கோட்ட அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர்.
ஆனால் பண்டிகை கால முன்பணம் வழங்கபடாததை தொடர்ந்தும், ரப்பர் கோட்ட அதிகாரிகளிடம் கேட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
பண்டிகை கால முன்பணம் வழங்கும் வரை தங்கள் வேலை செய்யும் பகுதிகளில் உள்ள பால் சேகரிப்பு நிலையங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் அறிவித்தனர். மேலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசு ரப்பர் கழக அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் நள்ளிரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வனத்துறையினர் கலக்கம் அடைந்து உள்ளனர்.
இதையும் படிங்க: நகர்ப்புற மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம்; ஸ்டாலின்