நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் ஏராளமான பள்ளி, கல்லூரி பேருந்துகள், அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் இந்த சாலையை பராமரிக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளதைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலை சீரமைக்கும் பணிகள் பேரூராட்சி அலுவலகம் பகுதியில் மும்முரமாக நடைபெற்றது.
அப்போது பணியாளர்கள் ரோட்டின் அகலத்தையும், உயரத்தையும் குறைத்து சாலை அமைத்ததால் மக்கள் திரண்டு சாலையை உயரமாக போடுமாறு வலியுறுத்தினர். ஆனால் அதனை பணியாளர்கள் கண்டுகொள்ளாததால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அரசு ஒப்பந்தத்தில் உள்ளபடி ரோட்டை போடுங்கள் இல்லையென்றால் போட வேண்டாம் என வாதிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சாலைப்பணிகள் முடிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் வாகனம் செல்லும் போது ரோட்டிலிருந்து காற்றடித்து மணல் பறப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக தலையிட்டு இந்த சாலையை நல்ல முறையில் முடித்துத் தரவேண்டும், இல்லையென்றால் ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.