கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், கல்வி உரிமை சட்டத்தின் படி இலவசமாக (RTE) படிக்கும் எழை மாணவ, மாணவிகளுக்கு கையடக்க மடிக்கணினி (டேப்லெட்) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 23 பள்ளிகளில் படிக்கும் 120 ஏழை மாணவ மாணவிகளுக்கு கையடக்க மடிக்கணினிகளை ( டேப்லெட்) வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுக பணிகளுக்காக சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் மீனவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, இதற்காக சுமார் 243 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக நபார்டு வங்கி மூலம் பணம் பெறவும் முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி விரைவில் சரியான முறையில் மீனவர்களை பாதிக்காத வகையில் துறைமுகப் பணிகள் நடைபெறும். அதுவரை மீனவர்கள் கடல் சீற்றங்களின்போது, அவ்வழியாக செல்லுகையில் லைஃப் ஜாக்கெட் அணிந்தும், அதிக காற்று வீசும் நேரங்களில் அந்த வழியை தவிர்த்தும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.
குழித்துறை நகராட்சியில் திமுக தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது ஒரு நாடகம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்களை மீண்டும் கேரளாவுடன் இணைத்து விடுங்கள்; மீனவர்கள் வேதனை