கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் அகில். இவரது இளைய மகன் அபினேஷ் (12), கடையாலுமூடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 31) காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில், கடையாலுமூடு சந்திப்பு அருகே உள்ள தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர் லூக்கா என்பவர் இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல், நேற்று (செப்டம்பர் 1) மாலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்து சுயநினைவை இழந்தார். உடனே அபினேஷை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர் கூறியதை தொடர்ந்து, சிறுவனை அங்கிருந்து அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, நள்ளிரவில் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சையால் சிறுவன் இறந்ததாகவும் மாவட்ட நிர்வாகம் மருத்துவமனையை உடனே மூடக்கோரியும் வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ஜான் பிரிட்டோ, விளவங்கோடு வட்டாட்சியர் ராஜமனோகரன், தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமசந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.