கன்னியாகுமரி: ஆடி மாத கடைசி திங்கட்கிழமையை முன்னிட்டு, இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நேற்று (ஆக.15) புஷ்பா அபிஷேகம் நடந்தது.
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மூலவர் மும்மூர்த்திகளுக்கும் கோவில்களில் உள்ள பரிவார மூலஸ்தான தெய்வங்களுக்கும் ஆடி மாதம் கடைசி திங்களில் புஷ்பாபிஷேகம் கேரளா ஐதீகம் முறைப்படி நடத்தப்படுவது வழக்கம். இப்படி நடத்தப்படுவதால் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்; திருமண தோஷம், குழந்தை பாக்கியம் செல்வம் உள்ளிட்ட எல்லா வளமும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
அந்த வகையில் நேற்று ஆடி மாத கடைசி திங்கட்கிழமையை முன்னிட்டு மாலை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட ஒரே வடிவில் காட்சியளிக்கின்ற மும்மூர்த்திகளுக்கும் புஷ்பா அபிஷேகம் நடந்தது.
இதேபோன்று வரலாற்று சிறப்புமிக்க 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நடந்தது. புஷ்பாபிஷேகத்தில் தாமரை, துளசி, மல்லிகை, ரோஜா கொழுந்து உள்ளிட்ட அனைத்து விதமான பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த பூஜைக்கு குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
இதையும் படிங்க: Video - 'சாமி என்னை மன்னிச்சிரு'; ஆட்டையைப்போட்ட பின் கடவுளிடம் மன்னிப்புக்கேட்ட 'மகா'திருடன்