வங்கக் கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் காரணமாக தென் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கன்னியகுமரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக வருவாய்த் துறையினர் முடுக்கிவிட்ட மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளில் அத்துறையினர் இறங்கியுள்ளனர். மேலும் இந்தப் புயல் ஏற்பட்டால் அதன்மூலம் எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் பூம்புகார் சுற்றுலாப் படகு போக்குவரத்து தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புப் பலகை ஒன்று பூம்புகார் போக்குவரத்துக் கழக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பூம்புகார் சுற்றுலாப் படகுப் போக்குவரத்துக்குச் சொந்தமான படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு கட்டிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அலுவலர்கள் தெரிவிக்கையில், மறு அறிவிப்பு வரும்வரை இந்தப் படகுச் சேவை தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றனர்.