கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப நாட்களாக ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் உடல் மசாஜ், கை கால் மசாஜ் செய்யப்படும் என போர்டுகள் மாட்டி அதன் உள்ளே விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்தது. இதனை அடுத்து காவல் துறையினர் ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை மையங்களை கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், மாயம் நாகர்கோவிலில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி அருகே மெயின் ரோட்டில் உள்ள ராஜகுரு என்பவரின் ஆயுர்வேத மசாஜ் மையத்தில் ஆசாரிப்பள்ளம் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பெண்கள் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வாலிபரும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரும் கைது செய்யப்பட்டனர். அப்போது அங்கு பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் வந்த போலி பத்திரிகையாளர் உட்பட இருவர் தப்பி ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பாக ஆசாரிப்பள்ளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், காவல் துறை நடத்திய விசாரணையில், குமரி மாவட்டத்தில் பல மசாஜ் மையங்கள் இயங்கி வருவதாகவும், ஒன்றோடு ஒன்றுக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறினர். ஒரு மையத்தில் இருக்கும் இரண்டு பெண்கள் வாரம் ஒருமுறை வேறு மையத்திற்கு மாற்றப்படுவதாகவும், இவர்களுடன் முக்கிய பிரமுகர்களும், பெரும் செல்வந்தர்களும் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இதில் தொடர்புடையர்களின் விபரங்களை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர்.