கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று (மார்ச் 23) நாகர்கோவிலில் நூறு விழுக்காடு வாக்குபதிவை வலியுறுத்தி குறும்படம் ஒன்றை வெளியிட்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் , கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 2 கோடியே 81 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 2 கோடியே 44 லட்சம் ரூபாய் விசராணைக்கு பின் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 15 கிலோ தங்கம் விசாரணைக்கு பின், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 449 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 1,795 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர். இவர்களில் 1,706 பேர் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 26 ஆயிரத்து 965 பேர் உள்ளனர். இவர்களில் 5,351 பேர் தபால் ஓட்டு போடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 5,227 பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை, மண்டலத் தேர்தல் பொறுப்பாளர்கள், வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்யப்படும். தபால் ஓட்டுகள் ரகசியமாகவே பதிவு செய்யப்படும். இவர்கள் தவிர, சுமார் 15,000 அரசு ஊழியர்கள், காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களும் தபால் ஓட்டு அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.