கன்னியாகுமரியில் வெளிமாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிக்கு அடுத்து அஞ்சுகிராமம் சோதனைச்சாவடி வழியாக தான் மாவட்டத்திற்குள் நுழைய முடியும்.
இந்நிலையில் குமரி மாவட்ட புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட பத்ரிநாராயணன் சோதனைச் சாவடிகளைப் பலப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டிவருகிறார்.
அதன் ஒரு அங்கமாக அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்குள்பட்ட நெல்லை குமரியில் எல்லையில் உள்ள அஞ்சுகிராமம் சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர் 24 மணி நேர காவல் பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் கூறும்போது, ”குமரி மாவட்டத்தில் அனைத்து சோதனைச்சாவடிகளும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, குமரி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் சுழற்சி முறையில் நிறுத்தப்படுகிறார்.
அதேபோல மாவட்டத்தின் உள்பகுதி சோதனைச்சாவடிகளிலும் காவல் துறையினர் பலப்படுத்தப்படுவார்கள். கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனைச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி காசி வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு!