கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகேயுள்ள நடைக்காவு பகுதியைச் சேர்ந்தவர் அஜின் ராஜ் (27). இவர், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியன் பிரிவில் காவலராக பணியாற்றி வந்த அவருக்கு குமரி மாவட்டம் கோதையாறு நீர் மின் நிலையத்திற்கு பாதுகாப்புப் பணி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று காலை எட்டு மணி அளவில் அவர் பாதுகாப்புப் பணிக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல் உயர் அலுவலர்கள் விசாரணை நடத்திவந்தனர்.
அவரின் இந்த தற்கொலை குறித்து காவலர்கள் கூறியதாவது:
அஜின் ராஜுக்கும் அவரது கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இரு வீட்டாரும் பேசி திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காதலர்கள் இடையே திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை உருவானதால், அஜின் ராஜ் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அஜின் ராஜின் காதலி கடந்த சில நாட்களுக்கு முன்பு குழித்துறை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி நேற்று அஜின் ராஜுக்கும் அவரது காதலிக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் அந்தத் திருமணம் பிடிக்காமல் அஜின் ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தற்போது பேச்சிப்பாறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.