கன்னியாகுமரி வெள்ளிசந்தை அருகே முட்டம் மீனவ கிராமத்தினைச் சேர்ந்தவர், அன்றோ சகாயராஜ். இவரது மனைவி பவுலின் மேரி (48). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இரு மகன்களும் சென்னையில் படித்து வருகின்றனர். அன்றோ சகாயராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
பவுலின் மேரி, அவரது தாய் தெரசம்மாளுடன் (82) முட்டத்தில் வசித்து வந்தார். அவர்களது உறவினர் பவுலின் மேரியின் செல்போனுக்கு கடந்த 6ஆம் தேதி அழைத்தபோது பதில் இல்லை. பல முறை முயற்சி செய்தும் செல்போனில் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் 7ஆம் தேதி நேரடியாக வீட்டிற்கே அந்த உறவினர் சென்றுள்ளார்.
அங்கு மின்சார இணைப்புப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்ததைக்கண்டு, முன்பக்க கதவினை உடைத்து சென்று பார்த்ததில் வீட்டில் பவுலின் மேரி மற்றும் அவரது தாய் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சோதனை செய்தபோது தாய், மகள் இருவரது தலையிலும் கம்பால் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் கழுத்தில் அணிந்திருந்த தாலி, செயின் மற்றும் வீட்டில் இருந்த நகைகளும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இரட்டைக்கொலை சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்த காவல் துறையினர், குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அங்கு முக்கிய தடயமான மங்கி குல்லா கிடைத்ததாகவும் அந்த படத்தையும் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும், குல்லாவுடன் நடமாடியவர்கள் குறித்து யாரேனும் தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் குளச்சல் சரக காவல் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: செங்கல்பட்டில் எரிந்த நிலையில் கிடைத்த ஆண் சடலம் - தீவிரமடையும் விசாரணை