சினிமாவில் காவலர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது போன்ற காட்சிகள் இடம்பெறுவது உண்டு. அதையும் மிகவும் ரசிக்கும் வகையில் இயக்குநர் படமாக்குவது தமிழ் சினிமாவில் அதிகளவில் ரசிகர்கள் பார்த்துவருகின்றனர். இந்நிலையில், நாகர்கோவிலில் காவலர்கள் நான்கு பேர் பொது இடத்தில் சண்டையிட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக இருப்பவர் ஆறுமுகம். இவரும் தனிப்படை உதவி ஆய்வாளர் சாம்சனும் குற்ற வழக்கில் தொடர்புடைய ஒருவரை விசாரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நடுவில் வைத்து அழைத்துச் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஆறுமுகம் ஓட்டியுள்ளார்.
அவர்கள் நாகர்கோவில் அடுத்த செட்டிகுளம் சந்திப்பில் சென்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த காவலர்களான கிருஷ்ணகுமார், சைலஸ் ஆகியோர் குற்றவாளியை மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்வதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இதைப்பார்த்த உதவி ஆய்வாளர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களை கண்டித்துள்ளனர். இதனையடுத்து, நால்வரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது தொடர்பாக, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, காவலர்களான கிருஷ்ணகுமார், சைலஸ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள சைலசை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகுமார், ஏற்கனவே வாக்கு எண்ணும் மையத்தில் பணியின்போது குடித்துவிட்டு காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.