கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியில் நடமாடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் காவல் துறை சார்பில் எச்சரிக்கை கொடுத்தும், பலர் அதனைக் கண்டுகொள்ளாமல் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர்.
இதுபோன்று சாலையில் சுற்றித்திரிபவர்களைக் கண்காணிக்க நாகர்கோவிலில் அனைத்து சாலைகளிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோட்டார், வடசேரி, பார்வதிபுரம் உள்பட மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் இன்று தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியில் 144 தடை உத்தரவை மீறியதாக நேற்று மட்டும் 197 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 176 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
குமரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட கடந்த ஐந்து நாள்களில் மாவட்டம் முழுவதும் இதுவரை 670 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், 534 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'அநாவசியமாக வெளியே வரக்கூடாது' - ஊரடங்கை மீறியவர்களை எச்சரித்த நெல்லை போலீசார்