கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமாக, நான்கு கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், இரண்டு கோழிப் பண்ணைகளை கடந்த 45 நாட்களுக்கு முன்பு ராஜன் என்பவருக்கு சுரேஷ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று (பிப்.20) ராஜன் கோழிப் பண்ணைக்கு வந்தபோது, அங்கிருந்த சுமார் ஆறாயிரம் கோழிகள் உயிரிழந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல்துறையினருக்கு ராஜன் தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஏற்கனவே கோழிப் பண்ணை நடத்தி வந்த துவரங்காடு பகுதியைச் சேர்ந்த சாஜன் என்பவர், கோழி தீவனங்களைத் திருடியதாகக் கூறி நீக்கப்பட்டார் என்பதும், இந்த ஆத்திரத்தில் சாஜன் கோழிகளுக்கு வைக்கப்படும் தண்ணீர் தொட்டியில் விஷத்தைக் கலந்திருப்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக ராஜன் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள சாஜனையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோழிப்பண்ணையில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு