புகைப்படம் என்பது தற்போது அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. புகைப்படம் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறுவது கிடையாது. இதனால் புகைப்படக் கலைஞர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த புகைப்படக் கலைஞர்கள் உலகம் முழுவதிலும் ஏராளமானோர் உள்ளனர்.
தமிழ்நாட்டில் புகைப்படத் தொழிலை நம்பி புகைப்படக் கலைஞர்கள், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொழிலை செய்து வருகின்றனர். இவர்களை நம்பி அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கனோர் உள்ளனர்.
இவர்களுக்கு வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே தொழில் நடைபெறுகிறது. மாதத்தில் சுபமுகூர்த்த தினங்களில் மட்டுமே திருமணங்கள், நிச்சயதார்த்தங்கள், பூப்புனித நீராட்டுவிழா போன்ற சுப வைபவங்கள், திருவிழாக்கள் நடைபெறுவதால் வருடத்திற்கு சில நாள்கள் மட்டுமே அவர்களுக்கு தொழில் கிடைக்கும். அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தான் வருடம் முழுவதும் தங்கள் குடும்பங்களை நடத்த வேண்டியுள்ளது.
மேலும் கோடை விடுமுறையில் பெரும்பாலானோர் நிகழ்ச்சிகளை நடத்துவதால் இந்த கோடை விடுமுறை நாள்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நம்பித்தான் பெரும்பாலான கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் கோடை விடுமுறையில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வாயிலாக கிடைக்கும் வருவாயை நம்பித்தான் வருடம் முழுவதும் உள்ள செலவினங்களை எதிர் கொள்கின்றனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் வருகிற மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் புகைப்படக் கலைஞர்களின் கோடை கால வேலைகள் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகை முடிந்ததும் தொடங்கும் வேலையானது மே மாதம் கடைசி வரை நடைபெறும். இந்த நாள்களில் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணங்கள், நிகழ்ச்சிகள் தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சில நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட சில குடும்பத்தினரை வைத்து மிகவும் எளிமையாக நடத்தப்படுவதால் புகைப்படக் கலைஞர்கள் தற்போது நிகழ்ச்சிகளின்றி ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் வருவாயின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இதைப் போன்று சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி சுமார் 100க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை போட்டோ எடுத்தால் மட்டுமே வீட்டில் அடுப்பு எரியும் என்ற சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்பும் சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எனவே புகைப்படம் எடுத்தல், ஸ்டுடியோ வைத்து சுபநிகழ்ச்சிகளுக்கு சென்று போட்டோ வீடியோ எடுத்தல் போன்ற கலைஞர்கள் தாங்கள் வருவாயிழந்து தங்களது குடும்பங்களை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால் மத்திய, மாநில அரசுகள் புகைப்படக் கலைஞர்களின் நலன் கருதி அவர்களுக்கும் மற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கியது போன்று நிவாரண தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு சேமிப்புப் பணத்தை வழங்கிய சிறுவன்