கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது தீண்டாமை எண்ணத்துடன் செயல்படும் கடுக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த பாலமுரளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியதாவது;
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானோர் பங்கேற்று பல்வேறு வகையான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடுக்கரை ஊராட்சி மன்ற தலைவர் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் பட்டியலின மக்களை மட்டும் ஒரு குழுவாக பிரித்து அப்பகுதியில் உள்ள சாக்கடைகளை அள்ள கூறியும், மனிதக்கழிவுகளை எந்தவித உபகரணங்களும் கொடுக்காமல் அகற்ற கோரியும் வலியுறுத்தி வருகிறார்.
எனவே, பட்டியலின மக்கள் மீது தீண்டாமை எண்ணத்துடன் செயல்படும் கடுக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.