கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன் கோவில் பகுதியில் 300க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் சுமார் 5 தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், அவர்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் காவல் துறையில் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அக்.14ல் சென்னை வரும் சோனியா, பிரியங்கா காந்தி.. மகளிர் மாநாடு ஏற்பாடுகளை ஆய்வு செய்த எம்.பி.கனிமொழி!
அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால், நேற்று (அக்.02) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் கிருஷ்ணன் கோவில் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச வேண்டும் எனவும், இல்லையென்றால் மறியலை கைவிட மாட்டோம் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் உடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து, இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் ஒரு இளைஞர் தீக்குளிக்க முயற்சி செய்ததால், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மோதலில் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்ட அருந்ததியர் இன மக்கள், அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீசாரைத் தாக்கியதாக கைது செய்யப்பட்டு தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: இயக்குநர் ஷங்கர் மீதான வழக்கு.. இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்!