திரைப்பட இயக்குநரும், அதிமுக தலைமைக்கழக நட்சத்திர பேச்சாளருமான பி.சி.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பொய்யை மெய்யாக்க நாடகம் நடத்துபவர் ஸ்டாலின். அவரது உளறல்கள் தற்போது உச்சத்திற்கு சென்றுவிட்டது. அறிவாலய பெர்னாட் ஷா போல் எல்லாவற்றையும் சொல்லிவருகிறார். உண்மையை சொல்வதேயில்லை. டெல்லி பக்கம் சென்றால் ஒன்றை பேசுகிறார். மம்தா மாநாட்டில் ஒன்று என மாறி மாறி பேசுகிறார். அவரது அறிக்கைகள் அனைத்தும் அட்டைக்கத்தி அறிக்கைகள்.
அண்ணா மறைவிற்கு பிறகு தனது நண்பர் என்று புரட்சித்தலைவர் போட்ட பிச்சையால்தான் கருணாநிதி முதலமைச்சர் ஆக்கப்பட்டார். கருணாநிதியை பணக்காரர் ஆக்கியது எம்ஜிஆர்தான். நமக்கு நாமம்(நமக்கு நாமே) திட்டத்தில் ஸ்டாலின் டீக்கடைக்கு சென்று கப்பில் ஸ்பூன் வைத்து டீ குடித்தார். உலகத்திலேயே வெள்ளி ஸ்பூனால் டீ குடித்தவர் ஸ்டாலின்தான்.
மேகம் எங்கு சென்றாலும் எப்படி பூமிக்கு மழையை தருகிறதோ அதுபோல் எல்லைகளை கடந்து போய் முதலீடுகளை ஈர்த்து வந்தவர் முதலமைச்சர் எடப்பாடி. அவர் வெளிநாடு சென்று 8 ஆயிரத்து 830 கோடி ரூபாய் முதலீடுகள், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 37 ஆயிரத்து 300 பேருக்கு வேலை உள்ளிட்ட எல்லாவற்றையும் கொண்டுவந்திருக்கிறார். அவரது பயணம் ஒரு வெற்றி பயணமாகும்" என்றார்.