கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவின் இறுதி நிகழ்வான பரிவேட்டை திருவிழா, பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி நவராத்திரி தொடங்கியபோது, கோயிலின் அலங்கார மண்டபத்தில் பொம்மைகள் வைத்து 10 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
இதனையடுத்து சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா நேற்று (அக் 5) நடைபெற்றது. இதனையொட்டி, பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோயிலின் வெளி பிரகாரம் உள்ள அலங்கார மண்டபத்தில், எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனைத்தொடர்ந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாதானபுரத்தில் பானாசுரன் என்ற அரக்கனை வதம் செய்ய பகவதி அம்மன் போருக்கு புறப்பட்டார். அப்போது நெற்றிப் பட்டம் சூட்டிய யானை, குதிரைகள், முத்துக்குடை, நாதஸ்வரம், பஞ்சவாத்தியம், செண்டை மேளம், கோலாட்டம் மற்றும் ஒயிலாட்டம் என ஊர்வலம் களைகட்டியது.
தொடர்ந்து மாலை மகாதானபுரத்தில் உள்ள மைதானத்திற்கு வந்து சேர்ந்த பகவதி அம்மன், அம்பு எய்தி அரக்கனை வதம் செய்யும் பரிவேட்டை திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் நவராத்திரிவிழா