கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இடி மின்னலுடன் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருகிறது. மலையோரப் பகுதிகளிலும் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
அதேபோல குமரி மாவட்டத்தில் விவசாய தேவைகளுக்குத் தண்ணீர் தேக்கிவைத்து பயன்படுத்தும் குமரி அணை நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்துவருகிறது. மேலும் அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் தோவாளை கால்வாய், நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய் வழியாக தண்ணீர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களை நிரப்பிவருகிறது. அணைகள், குளங்கள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேநேரத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக புத்தேரி பகுதியில் உள்ள சுமார் 400 ஏக்கர் நெல் பயிர்கள் மழை காரணமாக தலைசாய்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளதால் நெல் கதிர்களை அறுவடைசெய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இன்னும் ஓரிரு நாள் இந்த மழை பெய்தால் பயிர் அழுகி முளைக்கும் நிலைக்கு தள்ளப்படும். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் நேற்று இரவு பெய்த கனமழையில் செண்பகராமன்புதூர் அகஸ்தியர் காலனியில் வசிக்கும் வள்ளுவர் செல்வன் (55) என்ற செங்கல் சூளை கூலித்தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய வள்ளுவர் செல்வன் சத்தம் போட்டதால். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுபோல மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும் பொதுமக்கள் கடும் அவதியடைந்துவருகின்றனர்.