தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினதைச் சேர்ந்த 71 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் ஹாங்காங்கில் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு ஹாங்காங்கிலிருந்து சொந்த ஊரானா தூத்துக்குடி வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் விடுமுறை முடிந்து மீண்டும் ஹாங்காங் செல்வதற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றபோது. அங்கு அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து பார்த்ததில் கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறி இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் நாகர்கோவிலில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலுள்ள ஒரு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறார்.
அரசு மருத்துவர்கள் முதியவரின் ரத்தம், சளி மாதிரி ஆகியவற்றின் மாதிரியை எடுத்து, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அதன் முடிவு வந்த பிறகே முதியவரின் உண்மையான நோயின் நிலை தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொரோனா சிறப்புப் பிரிவில் இருந்த நோயாளி தப்பி ஓட்டம்!