கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கூட்டுமங்கலம் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி நாராயண பிள்ளையின் மகள் தர்ஷனா. இவர் ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் தன் வலது காலை இழந்தார். அப்போது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மாணவியின் மனதில் துளிர் விட்டது.
மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் கல்வி கற்று தனது பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் நிறைவு செய்தார். நீட் தேர்வில் பங்கேற்று சிறப்பாக தேர்வு எழுதினார். இதனால் அவருக்கு 157 மதிப்பெண்கள் கிடைத்தன. இதன்மூலம், தமிழ்நாடு அளவில் மாற்றுத்திறனாளிகள் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பிற்கான சீட் கிடைக்க உள்ளது.
மருத்துவம் படிக்க ஆசையிருந்தும் பயிற்சி மையம் செல்லுமளவு வசதியில்லை எனத் தெரிவிக்கும் தர்ஷனா, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது பொது அறிவு புத்தகங்களை வாங்கி படித்தாகக் கூறுகிறார்.
தான் மாற்றுத்திறனாளி என்பதால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்றதாகவும், அப்போது அங்கிருந்த சில மருத்துவர்கள் சில புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொன்னதாகவும் தர்ஷனா பகிர்ந்து கொள்கிறார்.
குறிப்பாக, கரோனா ஊரடங்கு நேரத்தில் படித்து சிறப்பாக நீட் தேர்வை எழுத முடிந்ததாகவும் அவர் கூறுகிறார். இந்த தேர்வில் கூடுதலாக மதிப்பெண்கள் எதிர்பார்த்த நிலையில், 157 மதிப்பெண்கள் தான் கிடைத்ததாகவும் வருத்தம் தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் படித்தாலும், உரிய வழிகாட்டுதலும் படிப்பதற்கான சூழலும் நீட் தேர்வை எதிர்கொள்ள முக்கிய காரணிகளாக இருப்பதையும் மறுக்க இயலாது.
இதையும் படிங்க:நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இலவச நீட் கோச்சிங்!