கன்னியாகுமரி: வள்ளியூர் பகுதியிலிருந்து வரும் நரிக்குறவக்ள் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஊசி பாசி மணி விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்துடன் மாலை நேரத்தில் திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறி வள்ளியூர் செல்கின்றனர்.
வழக்கம் போல் நேற்று (டிசம்பர் 9) முதியவர், பெண்மணி, குழந்தை ஆகிய மூன்று பேர் வள்ளியூர் செல்ல பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது முதியவர், பெண்மணி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் பேருந்தில் சத்தம் போட்டு சண்டை போட்டுவந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மூன்று பேரையும் பேருந்தில் இருந்து நடத்துநர் இறக்கி விட்டுள்ளார். அத்துடன் அவர்களின் உடைமைகளையும் தூக்கி வீசியுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேருந்து ஓட்டுநர் நெல்சன் (45), நடத்துநர் ஜெயதாஸ் (44) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோன்று கன்னியாகுமரியில் மீன் விற்கும் பெண்மணியை அரசு பேருந்திலிருந்து இறக்கிவிட்ட வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீன் விற்கும் தாய்க்கு நடந்த அவமரியாதை: ஸ்டாலின் கண்டனம்