கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு 400க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவில் கோணம் பகுதியில் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான குடோன்களில் இருந்து மத்திய அரசு மூலமாகவும், மாநில அரசு மூலமாகவும் அனுப்பப்பட்டு வரும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் பாழாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில், ரேஷன் கடை ஊழியர் அரிசி, கோதுமை, சீனி, பருப்பு போன்ற பொருட்களை, அந்த பகுதியில் உள்ள பலசரக்கு கடை நடத்துபவரிடம் விற்பனை செய்து வருவதாக சமுக ஆர்வலர் ஜான்விக்டர் தாஸ் என்பவருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரேஷன் கடைக்குச் சென்று பார்த்தபோது, ரேஷன் கடை ஊழியர் தனி ஒரு நபருக்கு 20 கிலோ பருப்பை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து, கையும் களவுமாக சிக்கி உள்ளார். இதனை அவர் தனது கைபேசியில் வீடியோவாகவும் பதிவு செய்து உள்ளார். இது குறித்து ரேஷன் கடை ஊழியரிடம் அவர் கேட்டபோது, அதிகாரிகள் துணையுடன்தான் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் யாரும் வாங்காத பொருட்களை தான் வெளி மார்கெட்டில் விற்பனை செய்கிறோம் என்றும், வெளி மார்கெட்டில் நீங்கள் எப்படி விற்கலாம் என கேட்டதற்கு, பொருட்கள் வீணாகிறது என்று விற்பனையாளர் கூறியுள்ளார். இந்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அதிகாரிகளின் முறைகேடு? - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!