கன்னியாகுமரி: பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோயில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலின் மூலவர் நாகராஜரை வணங்கினால் நாக தோஷம் நீங்கும் என்பது ஜதீகம். இதனால் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இந்த கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் தை மாத திருவிழா, இன்று (ஜன.28) காலை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
கோயில் தந்திரிகள் கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து திருக்கொடியேற்றம் செய்து வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள், சிறப்பு அபிஷேகங்கள் உடன் புஷ்பம், சிங்கம், கமலம், ஆதிசேஷம் மற்றும் யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஒவ்வொரு நாளும் சாமி எழுந்தருளி வீதி உலா வருவார். முக்கியமாக விழாவின் 9ஆவது நாள் (பிப்.5) தேரோட்டமும், 10ஆம் நாள் (பிப்.6) ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: வீடியோ: சத்துவாச்சாரி ஸ்ரீ பர்வத வர்த்தினி, சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்