கன்னியாகுமரி: நாகர்கோவில் வடசேரியில் ஊட்டுவாழ்மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் ஒழுகினசேரி நியாய விலை கடை இயங்கி வருகிறது. சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களைக் கொண்ட கடை இது.
இந்த நியாய விலை கடையில் திடீரென நாகர்கோவில் மாநகராட்சியின் 12 வது வார்டு கவுன்சிலர்(பாஜக) சுனில் குமார் பிரதமர் மோடியின் படத்துடன் வந்து, ரேஷன் கடைக்குள் நுழைந்து அவரே சுவரில் ஆணி அடித்து படத்தை மாட்டிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறிந்து வந்த வடசேரி போலீசார் பிரதமர் நரேந்திர மோடியின் படம் என்பதால் முடிவெடுக்க முடியாமல், இந்த பிரச்சனையினை கூட்டுறவு சங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு நைசாக நகர்ந்து சென்று விட்டனர்.
இந்நிலையில் இது குறித்து பாஜக மாநகராட்சி கவுன்சிலர் சுனில் குமார் கூறுகையில்,”மத்திய அரசு மானியத்தில் தமிழகத்திற்கு ரேஷன் பொருள்களை வழங்கி வருகிறது. ஆனால் தமிழக அரசு தானே அனைத்து பொருட்களையும் வழங்குவதைப் போல நடந்து கொள்கிறது.
அது மட்டுமல்லாமல், குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் அரிசி முறையாக வழங்குவது கிடையாது. மத்திய அரசு, மாநில அரசுக்கு அரிசி முறையாக வழங்கியும் கூட அதை விநியோகம் செய்வதில் குளறுபடிகளை மாநில அரசு செய்து வருகிறது. மத்திய அரசு தான் ரேஷன் அரிசி உள்ளிட்ட மானிய உதவிகளை வழங்கி வருகிறது. மத்திய அரசின் மானியங்கள் வேண்டும், ஆனால் எங்கள் பிரதமரின் புகைப்படம் வேண்டாமா?
பாரத மக்கள் போற்றும் எங்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடிஜியின் புகைப்படத்தை எங்கள் வார்டில் உள்ள நியாய விலைக்கடையில் மாட்டி எனது எண்ணத்தை நினைவாக்கினேன். தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் பாரத பிரதமர் புகைப்படம் வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
பிரதமர் படத்தை இவர்கள் மாற்றுவார்களே என்றால் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இதுபோன்று பிரதமர் படங்களை பொருத்துவேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!