கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பருத்திவிளைப் பகுதியில் மார்ச் 22ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றபோது, இளைஞர் ஒருவர் அதிவேகமாக பைக் ஓட்டிவந்து மோதினார். இந்த எதிர்பாராத விபத்தில் இரண்டு பைக்குகளும் பல அடிதூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு இருவருக்கும் படு காயங்கள் ஏற்பட்டது.
இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான பெண்ணின் பெயர் மேரி ஜெலின் (28) என்பதும், மணகுடியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், விபத்தை ஏற்படுத்திய இளைஞர் பெயர் ஜெனில் என்பதும், அவர் ராஜாக்கமங்கலத்திலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த விபத்துகாட்சிகள் அருகிலிருந்த கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.