கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த அருள்மிகு நாகராஜா கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை விழா சிறப்பாகும்.
இந்த நாள்களில் குமரி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்கள் குழந்தைகளின் கல்வி, திருமண தடை நீங்கக்கோரி நாகராஜா கோயிலின் முன் வேண்டுதல்களாக வைப்பது வழக்கம்.
மேலும், இங்குள்ள 500க்கும் மேற்பட்ட நாகர் சிற்பங்களுக்கு உப்பு, முட்டை, மஞ்சள் தூள், பால் உள்ளிட்ட பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுவர். இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயில் கடந்த வாரத்திலிருந்து கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. இருந்தபோதும் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவு கூட்டம் கோயிலுக்கு வரவில்லை.
இதனிடையே, ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப். 13) ஏராளமான பக்தர்கள் நாகராஜா கோயிலில் குவிந்தனர். அனைவரும் கரோனா ஊரடங்கு வழிகாட்டி நெறிமுறைகளின்படி தகுந்த இடைவெளி கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர்.