கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் அருள்மிகு ஆலமூடு அம்மன் கோயில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சண்டி ஹோமம், அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலையில் திருவிளக்கு பூஜை, வில்லிசை நடைபெற்றன. பின்னர் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல், தோவாளை முருகன் கோயிலிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று ஆரல்வாய்மொழி திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட அகலிகை ஊற்று பிள்ளையார் கோயிலில் இருந்து அபிஷேக குடங்கள், கரக குடங்கள், நெத்திபட்டம் சூட்டிய யானைகள் பவனி மற்றும் முளை பாத்தியுடன் பாத யாத்திரையாக பக்தர்கள் பஜனை பாடி ஆரல்வாய்மொழி வழியாக கோயில் நோக்கி வருதலும் பாயாச குளியல், அன்னதானம், அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடந்தது.
மாலையில் அக்னி கலசம் எடுத்தல், இரவில் அலங்கார தீபாராதனை, பூ படைப்பு, ஊட்டு படைப்பு ஆகியனவும் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து சிங்காரி மேள கச்சேரி, நாதஸ்வரம், வில்லிசை, 11 மணிக்கு பொங்கல் வழிபாடு, தீபாராதனை, 1 மணிக்கு மஞ்சள் நீராடுதல், மாலை 4 மணிக்கு திருஷ்டி பூஜை, 5 மணிக்கு நடை சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறுகிறது.
இதையும் படிங்க: வந்தவாசி மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா;303 பால்குடங்களின் ஊர்வலம்!