குமரி மாவட்டம், மயிலாடியை அடுத்த பெருமாள்புரம் பகுதியில் தெய்வேந்திரன் மலை உள்ளது. இந்த மலையின் சுற்றுப்பாதையை பொதுமக்கள் கிரிவலம் செல்லும் பாதையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த மலையில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த காட்டுத் தீயானது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் மலை முழுவதும் தீ வேகமாகப் பரவியது.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த தீயின் காரணமாக மலையில் இருந்த ஏராளமான பனை மரங்கள், சந்தன மரங்கள், மூலிகைச் செடிகளும் எரிந்தன.
தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்த மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருக்கும் தீயணைப்பு வண்டிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மளிகை கடைக்குள் புகுந்த யானைகள்; ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!