கன்னியாகுமரி: பாஜக மறை பொருளை வைத்து அரசியல் செய்பவர்கள் என்றும், அமலாக்கத்துறை போன்ற நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட அமைப்புகளை வைத்து அரசியல் செய்வதாகவும், அதிமுக மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணை மேற்கொள்ள ஆளுநர் கையெழுத்திடாமல் கோப்புகள் காத்திருக்கின்றன என்றும், ஆளுநருக்கு நேரமில்லையா எனவும், தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஜூலை 18ஆம் தேதியை 'தமிழ்நாடு நாள்' விழாவாக அறிவித்தது. இதனை மாநிலம் முழுவதும் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் அறியும்படி தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டன.
தமிழ்நாடு முழுதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில், பள்ளி மாணவ, மாணவியர்களைக் கொண்டு ஊர்வலம் மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: Minister Ponmudi: 100க்கும் மேற்பட்ட கேள்விகள்.. அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை 2-ம் நாள் விசாரணை!
பேரணியானது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி வரை சென்றடைந்தது. அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “பாஜக மறைபொருளை வைத்து அரசியல் செய்பவர்கள். அமலாக்கத்துறை போன்ற நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட அமைப்புகளை வைத்து அரசியல் செய்பவர்கள். பாஜக இல்லாத மாநிலங்களில் அவர்கள் எந்த அணுகுமுறையை கையாளுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்” என கூறினார்.
மேலும் “இதற்குச் சான்றாக டெல்லியில் நடந்த சம்பவம், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் நசுக்கப்பட்ட சம்பவம், மேலும் மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி என அனைத்தும் மக்களுக்குத் தெரியும். இதில் வருத்தப்பட கூடிய விஷயம் என்னவென்றால், நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ அரசியல் கட்சியினுடைய அங்கமாக செயல்படுகிரது. இச்செயலை மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஏன் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் இந்த மாதிரியான ரைடுகள் நடைபெறவில்லை? இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு தலைபட்சமானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது. அதிமுக மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரப்பட்ட கோப்புகள் இதுவரை ஆளுநர் கையெழுத்திடாமல் இருக்கிறார். அதற்கான காரணம் என்ன? திமுக மிசாவை எதிர்கொண்ட கட்சி. பல்வேறு சவால்களையும் சந்தித்த கட்சி. இந்த அடக்குமுறைகளுக்கு பயப்படாது” என கூறினார்.
இதையும் படிங்க: மும்பையில் 3வது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் - விரைவில் தேதி அறிவிப்பு!